கோபால்ஜி எனும் வீரத்துறவி ஸ்ரீ ராமகோபாலன் அவர்கள்.பல நாட்கள் அவருடன் நெருங்கி பழகியிருக்கிறேன்.பல சுவாரசியமான அனுபவங்கள். என் கணவரின் பூர்வீகம் சீர்காழி, இருவரும் சீர்காழி என்பதால் சில நாட்களிலேயே நெருக்கம் அதிகமானது . சீர்காழியில் ஜீவசமாதி அடைத்திருக்கும் கதிர்காம ஸ்வாமிகள் மடத்தில் வீற்றிருக்கும் கதிர்காம ஸ்வாமிகள் தான் அவருக்கு குரு. சமீபத்தில் அங்கு சென்று தரிசனம் செய்தோம். இப்படி அவருடன் பல நினைவுகள்.இன்றும் எங்கள் மேஜையில் அவரின் உருவப்படம் உண்டு.
சில வருடங்களுக்கு முன் அவரை தினந்தோறும் வாரா வாரம் சந்திக்கும் பாக்கியம் கிடைத்தது.. இரவு பொழுது சென்றால் உணவு வாங்கி செல்வேன். எங்கள் இல்லம் பக்கம் வந்தால் landline ல் அழைப்பார் . யாருக்கும் எளிதில் நுழையாத என் மூத்த மகனின் பெயரை சொல்லி நவ யவ்வன் தந்தை இருக்காரா என்று அழைப்பார். இப்போ வந்தால் மோர் சாதம் கிடைக்குமா? என்பார் .
ஒரு முறை கருணாநிதி ராமரை அவதூறாக பேசிய தினம் அவர் அறையில் உட்கார்ந்து கொண்டு பேசிக்கொண்டிருந்தோம். அவருடைய தொலைபேசி அழைத்தது மறு முனையில் பேசியது திரு சோ அவர்கள். அவர்கள் இந்திய தேசத்தின் மீது கொண்ட பற்று , அதனை இந்த திராவிட தீய சக்திகளிடம் இருந்தும் காக்க எவ்வளவு எல்லாம் பாடுபடுகிறார்கள் என்று தெரிந்தது.
அவருடைய 80வது பிறந்தநாளுக்கு hindumunnani.org என்ற இணையதளத்தை உருவாக்கி அவருக்கு பரிசளித்தோம். மகிழ்ந்தார்.அவருடனான இந்த அனுபவங்களை ஏற்படுத்திக்கொடுத்த திரு வெங்கடேஷ் அவர்களுக்கும் , திரு. ராமன் அவர்களுக்கும் நன்றிகள்.
ஒரு நாள் அவரை சந்தித்து ஆசிர்வாதம் பெற்று புறப்பட்டோம். வெளியே சென்ற எங்களை அழைத்தார் தன் கதவில் இருந்த மிக பெரிய ராமர் படத்தை பரிசளித்து அனுப்பிவைத்தார். இன்றும் அந்த ராமர் எங்கள் பூஜை அறையில் எங்களை ரக்ஷிகின்றார்.
திரு ராமகோபாலன் இந்த ராமர் படத்தின் மூலம் எப்போதும் எங்களை ஆசிர்வதிப்பார்.
சுமார் 17 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஸ்ரீ ராமகோபாலன்ஜி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் வாழ்ந்த அந்த கோயிலுக்கு சென்று அவரின் ஆசீர்வாதம் பெற்றோம். திரு. பக்தன் ஜி, பசு தாய் இதழின் ஆசிரியர் திரு கணேசன் ஜி , திரு மனோகர் ஜி , திரு. பத்ம ராஜ் ஜி ஆகியோருடன் இனிதான ஒரு சந்திப்பு.
ஸ்ரீ ராம கோபாலன் ஜி அவரின் அறையில் நுழையும்போதே ஒரு தேச உணர்வு நம்மை ஆட்கொண்டது. மெய் சிலிர்த்தது. இதே அறையில் அவருடன் பல அனுகிரக போதனைகளை கேட்டிருக்கிறோம். அதே அறையில் இன்று 19-09-2022 கண் மூடி அவரை நினைத்து தியானித்து நிற்கும் போது அவர் நம்முடனே இருப்பது போன்ற ஒரு உணர்வு.
அவர் நமக்கு அளித்த சிந்தனைகள், அவர் நமக்கு அளித்த தைரியங்கள் நம்மையும் நம் நாட்டையும் என்றும் வழி நடத்தி செல்லும்.